Thursday, March 20, 2008

ஜோதா அக்பர்.. உடையாத விற்களும் தேயாத நிலாக்களும்!

பயணம் செய்வதற்கென்றே


வேண்டும் சில பயணங்கள்,


போகும் இடம் பற்றிய கவலைகளின்றி ...


----------------------------------------------------------------94-இல் வைரமுத்து எழுதிய புதினம், "வில்லோடு வா நிலவே". சேரன் செங்குட்டுவன் காலத்தில் நிகழ்வதாய் புனையப்பட்டது, இது.


செங்குட்டுவனின் சித்தி (தந்தை நெடுஞ்சேரலாதனின் இரண்டாம் மனைவி) மகனான சேரலாதன் தொண்டியைத் தலை நகராகக் கொண்டு சேர நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்த பொழுது நிகழ்ந்தது தான் "வில்லோடு வா நிலவே"."சேரன் வஞ்சி" என்ற தலைப்பில் எஸ். கே. அய்யங்கார் எழுதிய வரலாற்று ஆய்வு நூலில் "காக்கைப்பாடினியார் நச்செள்ளை என்ற பெண் கவிஞரை காதல் மணம் புரிந்து பட்டத்து அரசியாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினான் சேரலாதன்" என்று குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் தென்படும் இந்த சுவாரசிய முரண் தான் விதையாக விழுந்து, அதிலிருந்து வில் முளைத்தெழுந்திருக்கிறது.வருணபேதம் (மனுஸ்ம்ரிதிப்படி, சமூகம் நான்கு வகுப்புகளாக பிரிக்கப்பட வேண்டும். ஆரியர்கள், க்ஷத்ரியர்கள், வைஸ்யர்கள் மற்றும் சூத்ரர்களாக ஒவ்வொரு பிரிவினரும் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன எனப் பட்டியலிடுவதே "வருண பேதம்"!) ஆட்சி நெறியாக கோலோச்சிய காலத்தில் 'கொல்லன்குடி பெண்ணொருத்தி சேர அரசின் கொலுமண்டபமேறினாள்' என்பது என் நரம்புகளில் தீ மூட்டியது" என இந்த முரணை சிலாகிக்கிறது, வைரமுத்துவின் முன்னுரை.சுவாரசியம் ஒன்று - நச்செள்ளை என்கிற புலவரை சேரலாதன் என்ற புரவலன் மணந்தது.சுவாரசியம் இரண்டு - கொல்லன்மகளான அவள், சேர செங்கோலின் ஒரு பகுதியாய் ஆனது.இப்படி "ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வருணாசிரமத்தை எதிர்த்த இளைய சேரனின் கதை"யை இன்று கற்பனை கலந்து படைப்பதன் நோக்கம் என்ன?அந்த காலக்கட்டத்தில், சமூகத்தில் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகளை எதிர்த்து ஒரு புரட்சி செய்யப்பட்டிருக்கிறது. அதைச் செய்தது ஒரு அரசன் என்கிற முடிச்சு, இன்று நமக்கு பரிமாறப்படுகின்ற பொழுது, அன்று வாழ்ந்தவர்கள் பற்றிய ஒரு பார்வை, ஒரு ஈடுபாடு உருவாகிறது இல்லையா, அதற்காகத்தான்."ஒவ்வொரு மனிதனும் கடந்த காலத்தின் தொடர்ச்சிதான். நாம் இன்று அணிகிற நாகரிக உடை என்பது, இலை தழை வடிவத்தின் தொடர்ச்சிதான்" என்பதை அறிய நேர்கையில், ஆடை மீதும் மரியாதை வருகிறது.பெட்ரொலும், மின்சாரமும் இல்லாத காலத்தில் காதலுக்கும் வீரத்துக்கும் வாழ்க்கைப்பட்ட ஒரு பண்பாடு மெல்ல மீசை முறுக்குகிறது. "பழைய நாகரிகம் பயிலப் பயில, 'எப்படிப்பட்ட ஒரு இனத்தின் (பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீரிப் புதைப்போம்! - புற நானூறு) எச்சமாக இருக்கிறோம்" என்கிற சிலிர்ப்பு ஏற்படுவதாய் இரும்பூதுகிறது, வைரமுத்துவின் முன்னுரை.தலைவன் தலைவியை சந்திக்கிறான் - காதலில் விழுகிறான் - எதிர்ப்பு - எதிர்ப்பை எதிர்த்து கரம் பிடிக்கிறான் - வில்லன்களின் சதி - காதலுக்காக ஆட்சியைத் துரக்கிறான்... என ஒரு வெகுமக்கள் திரைப்படத்திற்கான திரைக்கதை இலக்கணங்களோடு (!) எழுதப்பட்டதுதான் "வில்லோடு...".


என்றாலும், இதுவரை எந்த வரலாற்றுப் பாடப்புத்தகமும் செய்துவிடாத வேலையையும் சேர்த்தே செய்கிறது இந்த புதினம்.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சமூகச்சூழல், அதன் திரிபுகள், அதிகார மையங்கள், அரசியல் நிலை, பண்பாடு, வீரம், என தமிழ்வாழ்க்கை பற்றிய நெருங்கியதொரு பார்வைத்தளம் அமைக்கிறது, அத்தியாயம் அத்தியாயமாய்த் தாவச்செய்யும் மொழி நடையுடன்.இது "வில்லோடு..." மட்டுமல்ல, பொன்னியின் செல்வன் (வந்தியத்தேவனை நேசிக்காதவர்கள் யார்?), கடல்புறா பரம்பரை புதினங்கள் பலவற்றுக்கும் பொருந்தும்.மேலும், வைரமுத்துத் தமிழின் நீட்சியும், மொழியாளுமையும் "வில்லோடு..."வை வேறுபடுத்தி வேறொரு தளத்தினில் கொண்டு வைக்கின்றன." என்ன இது, மூடிய சிப்பிக்குள் மூடிய சிப்பிக்குள் முத்திருந்தால் வியப்பில்லை, ஒரு சிற்றரசே இருந்தால்..?" என சேரலாதன் நச்செள்ளையை வியப்பதும்..." போதும், போதும், உங்கள் இருவரின் நாக்கும் நீங்கள் குடியிருக்கும் தெருக்களைவிட நீளமாக இருக்கும் போலிருக்கிறதே..!" என நச்செள்ளையின் தோழி குறும்போடு குறிப்பிடுவதும்..." கடல் என்பது அலையடிக்கும் ஆகாயம். ஆகாயம் என்பது மேகங்கள் மிதக்கும் கடல்' என்ற கற்பனையும்..." காதலிப்பவர்களுக்கெல்லாம் அறிவு வயப்படுகிறதோ இல்லையோ, மொழி வயப்பட்டு விடுகிறது!" என்ற நையாண்டியும்..." எல்லா மீறல்களும் தவறல்ல.. மேகத்தை மழை மீறினால் பூமிக்கு நன்மை என்று பொருள்!" என்ற வாதமும்..."மடலேறுதல் (ஒருதலைக் காதல் கொண்டவன் தன் காதலைப் பகிரங்கப்படுத்தி பனைக் குதிரையேறி தன் காதலைக் கவிதையாய்ப் பாடி வருவான். அப்படியும் காதலி இசையவில்லையெனில் அடுத்த நாள் மலையேறிக் குதித்து உயிர் துறப்பான்.) , ஆ நிரை கவர்தல் (ஓர் அரசன் மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்குமுன், தன் படை வீரர்களை அந் நாட்டுக்கு ரகசியமாய் அனுப்பி அங்கிருக்கும் பசுக்களை கவர்ந்து வரச் செய்வது - பசுக்களைக் கொல்வது போர் தர்மமல்ல), அரச விதிகள் (போருக்கு முன் இரவலர்களை அழைத்து மன்னன் தர்மம் செய்ய வேண்டும்), திருமண மரபுகள்( போரில் வெற்றி கொள்ளும் நாட்டின் பெண்களை - "கொண்டி மகளிரை" - சேர மன்னன் மணக்க மாட்டான்), அவ்வளவு ஏன்.. "பஞ்சணையிலும் போர்க்களத்திலும் உணர்ச்சி வசப்படலாகாது" எனக் கலவி ரகசியங்கள் வரை நம் பண்பாட்டுக் கூறுகளும், சுவையூட்டிகளும் விரவிக் கிடக்கின்றன, "வில்லோடு.." முழுவதும்.சரி, ஜோதா அக்பருக்கும் "வில்லோடு.."வுக்கும் என்ன சம்பந்தம்?


எனக்கென்னவோ இவைதான் கோவாரிக்கரும் வைரமுத்துவும் சந்தித்துக் கொள்ளும் மையப்புள்ளியெனப் படுகிறது.கொல்லன்குடி மங்கை சேர அரசியாகிறாள் தமிழ் புதினத்தில்.


ராஜபுத்திரி "மல்லிகா-ஏ-ஹிந்துஸ்தான்" ஆகிறாள் ஹிந்தித் திரையில்.


வைரமுத்துவின் நரம்புகளில் நாணேற்றிய அதே முரண் தான் கோவாரிக்கரையும் உந்தியிருக்க வேண்டும்.முகலாயப் பேரரசின் மிகச்சிறந்த மாமன்னனாக பாரபட்சமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் ஜலாலுதின் (அக்பர்) பல ராஜபுத்திரிகளை மணந்தார் என்பது இதற்குமுன் அனைவரும் படித்த பாடம் தான். ஆனால், அதன் பின்னால் இருந்திருக்கக் கூடிய அரசியல் சூழலை, அதனால் ஏற்படும் கலாச்சார நெகிழ்வுகளை (மன்னன் மனைவியை திரும்ப அழைக்க அவள் அம்மா வீட்டுக்கு வரும்பொழுது பெண்கள் கூட்டத்துக்கு நடுவே இருக்கும் அவளை அடையாளம் காண்பது போன்ற சின்ன சின்ன அழகியல் நிமிடங்கள்...), குடும்ப நீரோட்டங்களை ( ஷாஹென்ஷாவின் வளர்ப்பு அம்மாவும் " மாமியாராக" நடந்து கொள்வது..), முன்பும் பின்புமாக, பேசும் படமாக பார்க்கும் பொழுது "வில்லோடு வா நிலவே" அனுபவம் மற்றுமொருமுறை ஏற்படுகிறது.மேலும், எந்தவிதத்திலும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத பேரரசன் தன் மதத்திற்கு முற்றிலும் மாறான வேறொரு மதத்திலிருந்து ஒரு இளவரசியை மனைவியாக ஏற்றுக்கொள்வது வேண்டுமானால் அரசியலாக இருக்கலாம். ஆனால், அவள் அரண்மனைக்குள்ளேயே கிருஷ்ணனுக்கு கோயில் கட்டிக்கொள்ள, வழிபட அனுமதிப்பது, அதற்கும் மேலாக அவள் காதலிக்கும் வரை காத்திருப்பது... சக மனித அன்பும் மரியாதையுமே ஆகும்.உண்மையிலேயே ஜலாலுதின் இப்படி இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்பதில் எனக்கு அக்கறை இல்லை. மாறாக, அது முழுக்க முழுக்க கற்பனையாக இருந்தாலும், இன்றைய மதச்சகிப்பின்மை நிறைந்த வட இந்தியாவிற்கு இது சர்க்கரை தடவி பரிமாறப்படும் சமூக செய்தியாகவே என்னால் கருத முடிகிறது.16-ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கு, அதிலும் மனைவிக்கு சம உரிமை கொடுக்கும் ஒரு பேரரசனைப் பார்த்து விட்டு ஒரு வீட்டு ரகசியக் கண்ணீராவது கசிவது நிற்குமானல் அதுவே கோவாரிக்கரின் வெற்றி."ஜோதா அக்பர் எதையும் உணர்த்தவில்லை. என்னை எதையும் உணரச்செய்யவில்லை" என்று விமர்சித்த தோழிக்கு - இதுவும் ஒரு மாற்றுப்பார்வை, அவ்வளவே.பயணம் செய்வதற்கென்றே
வேண்டும் சில பயணங்கள்,
போகும் இடம் பற்றிய கவலைகளின்றி ...
ஜோதா-அக்பரும், நச்செள்ளை-சேரலாதனும் அவற்றில் சில.
1 comment:

Me said...

:-) Karuthukal ..

A movie should speak for itself and if the critics do it... its not the movies victory but the critics ...