Tuesday, April 1, 2008

உசுரு...

தேதி நினைவில்லாத ஒரு அக்டோபர் '99 தினம்...கேரளாவில், செங்கண்ணூரில், தங்கியிருந்த அறைக்கு வெளியே வானம் பார்த்தபடி சரவணனும் நானும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறோம்.. பம்பாய் படத்தின் உயிரே பாடலைப் பற்றி உரையாடல் திரும்புகிறது.. "இந்த படத்தை பாரதிராஜா எடுத்திருந்தா எப்படி இருக்கும்?!" என்று சுவையான ஒரு சிந்தனை தோன்றுகிறது.. பம்பாயின் பல்வேறு (முதல் பாதி) காட்சிகளுக்கு ஒரு "பாரதிராஜாத்தனத்தை" கொடுத்து பார்க்கிறோம்.. சிரிப்பும், சுவையுமாக மாறுகின்றன மணிரத்ன காட்சிகள்.. (அரவிந்த் சாமி வீட்டில் ஒரு தண்டட்டி கிழவி கண்டிப்பாக வெற்றிலை குதைத்துக் கொண்டிருந்திருக்கும்! பர்தாவைக் கழற்றி பட்டாம்பூச்சி பிடித்திருப்பாள் சாயிரா பானு! ஒரு காட்சியிலாவது அரவிந்த் சாமியின் பதிலடிகள் கற்பனையில் நாசரின் கன்னத்தில் அறைந்திருக்கும்!)
சரவணன் கிளம்பிப் போன பின்னும் அந்த உயிரே பாடல் பற்றி தோன்றிக் கொண்டே இருக்கிறது.. அப்பொழுது எழுதியது, இப்பொழுது பூக்கிறது...


"உசுரு..."


அவன்...


நடந்து நடந்து களைச்சுப் போச்சு
நெலவும் கூட ஒறங்கிப் போச்சு
பாவிமக நெனப்பினிலே
நெஞ்சு மட்டும் ஒறங்கலையே

இருட்டுப் போர்வை போத்திக்கிட்டு
இந்த லோகமெல்லாம் கண்ணசர
தரைமீனா நா மட்டும்
துடிக்கிறது தெரியாதா

கம்மாக்கரை சந்திப்பெல்லாம்
கண்ணுக்குள்ள நிக்குதடி - என்
கைப்புடிச்சி நீ செஞ்ச சத்தியம்
இப்பக்கூட வலிக்குதடி

மல்லாந்து நா கெடக்க
விண்மீனும் சிரிக்குதடி
என் மீசையத்தான் மழிக்கச் சொல்லி
வீண்வம்பு பேசுதடி

ஊரெல்லாம் எதுத்தாலும்
ராசாத்தி கைப்புடிப்பேன்-உன்
ஒரு பார்வை கூட வந்தா
கோட்டயெல்லாம் நா ஜெயிப்பேன்

சாமக்கோழி கூவையிலே
பொழுது ரென்டும் கூடையிலே
வந்திருவேன்னு சொன்ன மயில்
வாசம் கூட வரவில்லையே...

புளியமிலாறு கையெடுத்து
அப்பன்காரன் அடிச்சானோ
அரளிவெதை அரைப்பேன்னு
ஆத்தாக்காரி அழுதாளோ

ஆரு ரூவா முழமுன்னு
வாங்கி வச்ச மல்லிபூவு
வாடுறத பாக்கையிலே
வாழ மனம் புடிக்கலையே

கண்ணுமணி திங்கத்தான்
கொண்டுவந்த கைமுறுக்க
கட்டெறும்பு மொச்சுவிட
காள உயிர் தெறிக்குதிங்கே

நாலுதெச வழியிருக்க
ரெண்டு மட்டும் விழியிருக்க
எந்த பக்கம் வருவாயோ
என் ஆச பைங்கிளியே

வேர்த்து வேர்த்து ஒடம்பெல்லாம்
தெப்பம்போல ஆகிடிச்சு - என்
உள்வெப்பம் தாளாம
மேகம்கூட ஓடிடுச்சு

நெலமெல்லாம் எழுதிவப்பேன்
என் காதல் பொலம்பி வப்பேன்
நீ வந்து பாக்கையிலே
வானமேறிப் போயிருப்பேன்

பொட்டு வச்ச பூ வந்தா
புது சென்மம் எனக்கு வரும்
வட்ட நெலா வரலேன்னா
சட்டுன்னு உசிர் போகும்.


அவள்....ஒத்தக்கல்லு மூக்குத்தி
அணிஞ்ச இந்த ராசாத்தி
அல்லல்பட்ட கத இதத்தான்
அத்தானே கேளுமய்யா

பொழுது சாஞ்சிப் போச்சின்னு
நெலா வந்து சொன்னுச்சா
சீவிமுடிச்சு சிங்காரிக்க
சிறுக்கி நானும் போனேங்க...

அலங்காரம் முடிச்சுப்புட்டு
அல்லிராணி மொகம் பாக்க
கண்ணாடியில் நின்னப்ப
ஏதோவொண்ணு கொறஞ்சதய்யா

ஓரக்கண்ணால் பாத்தப்ப
ஒரு கொறையும் தோணாம
உத்து உத்துப் பாத்தப்ப தான்
எங் கொறைய தெரிஞ்சிக்கிட்டேன்

பொட்டில்லா நெத்தியிலே
பட்பட்னு அடிச்சிக்கிட்டேன்
என் நெழலும் கூட கேக்காமலே
எனக்குள்ளே சிரிச்சிக்கிட்டேன்

பொட்டுவைக்க மறந்திட்டுதான்
நா வந்து நின்ன நாள் முழுக்க
நீ பேசாம எனைக் கொன்ன
அந்த புதன்கிழமைய மறப்பேனா?

குங்குமத்த வைக்காமுன்னு
சிமிழத்தான் நான் தொறந்தா
என் பிம்பம் எனைப்பாத்து
ஏளனமா சிரிச்சதயா

வெறுஞ்சிமிழ வச்சிகிட்டு
வேறென்ன செய்யிறதாம்
வழியேதும் இருக்கான்னு
ரோசனையா நானிருந்தேன்

எதுத்த வீடு அடுத்த வீடு
கேக்க எனக்கு நா கூசும்
எரவல் விசயம் தெரிஞ்சதுன்னா
என் ஆத்தா கை பேசும்

கஸ்தூரி மஞ்சளில்ல
கைப்பகுவமும் எனக்கு யில்ல
எப்படித்தான் குங்குமத்த
இன்னிக்குள்ள நானிடிப்பேன்?

காட்டாத்துக் கரையினிலே
காத்து காத்து நீயிருப்பே - ஒன்
கண்மணிய காணாமத்தான்
நீறுபூத்துப் போயிருப்பே

கவிதயெலாம் எழுதிவந்து
காதுக்குள்ள படிப்பீக
புரியாட்டிப் போனாலும்
அந்த ஒதட்டசைவ பாத்திருப்பேன்...

இப்படி கனவு மேல கனவு வச்சு
மாலையொண்ணு தச்சு வச்சேன்
எல்லாமே கலைஞ்சுப் போச்சு
கண்ணீரே மிச்சமய்யா

உசிரத்தான் விடுவென்னு
ஒன் பொலம்பல் கேட்டதய்யா
ராசாவே நானிருக்க - ஒன்
கண்கலங்க கூடாதய்யா

கண்ணாளா ஒன் உசிர
என் உசிருக்குள் முடிஞ்சிருக்கேன்
பாறைக்குள் நீராக
பொத்திப் பொத்தி வச்சிருக்கேன்

உசிர் போகும் வேள வந்தா
என்னுசுர நா குடுப்பேன்
ரெண்டுசுரு நாம் வாழ
ஒத்த உசுரு போதுமய்யா..!